பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் முதல்முறையாக தகுதி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் கடந்த மாதம் நடந்தது.
புதுடெல்லி,
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் நேரடியாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26-ஆகஸ்டு 11) தகுதி பெற முடியும் என்ற நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடமும், இந்திய பெண்கள் அணி 1-3 என்ற கணக்கில் சீன தைபேயிடமும் தோற்று வெளியேறின. இதனால் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் தற்போது இந்திய அணிகள் உலக தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. புதிய தரவரிசையின் படி ஆண்கள் பிரிவில் சுலோவேனியா (11-வது இடம்), குரோஷியா (12-வது இடம்), இந்தியா (15-வது இடம்) ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் தாய்லாந்து (11-வது இடம்), போலந்து (12-வது இடம்), இந்தியா (13-வது இடம்), சுவீடன் (15-வது இடம்) ஆகிய அணிகளும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன என்று சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் அணிகள் பிரிவு 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்திய அணிகள் தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.