'இந்தியாவின் பூகம்பம் குகேஷ்' - முன்னாள் செஸ் சாம்பியன் காஸ்பரோவ் புகழாரம்


இந்தியாவின் பூகம்பம் குகேஷ் - முன்னாள் செஸ் சாம்பியன் காஸ்பரோவ் புகழாரம்
x

குகேசை பூகம்பத்துடன் ஒப்பிட்டு, முன்னாள் உலக சாம்பியனான காஸ்பரோவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். 17 வயதில் மகுடம் சூடிய அவர் ஆண்டின் இறுதியில் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோத உள்ளார்.

ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டு கால அச்சாதனையை இப்போது குகேஷ் தகர்த்து விட்டார்.

இந்த நிலையில் குகேசை பூகம்பத்துடன் ஒப்பிட்டு, முன்னாள் உலக சாம்பியனான 61 வயதான காஸ்பரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'குகேசுக்கு வாழ்த்துகள். செஸ் உலகில், புவியின் மேல்தட்டுகளை மாற்றி அமைத்து டொரோன்டோவில் உச்சத்தை தொட்டு இருக்கிறார், இந்த இந்தியாவின் பூகம்பம். உயரிய பட்டத்துக்காக அவர் சீன சாம்பியன் டிங் லிரனுடன் விளையாட உள்ளார். இந்த போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், 'அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ள பல முன்னணி ஜூனியர் வீரர்கள் இப்போது சீனா மற்றும் இந்தியர்களின் செஸ் மீதான ஆர்வம் மற்றும் சாதனையை பார்க்கிறார்கள். நாங்களும் குகேசின் வளர்ச்சியை கவனிக்கிறோம்' என்றும் கூறியுள்ளார்.


Next Story