அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டி: கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்


அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டி:  கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்
x

அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஈரோடு

ஐரோப்பியா நாடான அண்டோரா நாட்டில் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டி கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஈரோட்டை சேர்ந்த பிரபல சதுரங்க வீரரும், சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான இனியன் பங்கேற்று விளையாடினார்.

இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் 9 பேர், சர்வதேச மாஸ்டர்கள் 24 பேர் உள்பட 146 சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினார்கள். ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் கிளாசிக்கல் பிரிவு மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் விரைவு போட்டி என்று 2 பிரிவுகளிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

கிளாசிக்கல் பிரிவில் 9 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இதில் இனியன் 5 சுற்றுகளில் வெற்றி பெற்றார். 4 போட்டிகளை டிரா செய்தார். இதன்மூலம் 7 புள்ளிகள் பெற்றார். இதுபோல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் லோபஸ் மார்ட்டினஸ் 7 புள்ளிகள் பெற்றார். இனியன் மற்றும் லோபஸ் மார்ட்டினஸ் 2 பேரும் ஒரே புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தனர். அதைத்தொடர்ந்து போட்டி நடுவர்கள் டை பிரேக் முறையில் முடிவு அறிவித்தனர். அதில் இந்திய வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் வெற்றி பெற்றார்.

இதுபோல் கிராண்ட் பிரிக்ஸ் விரைவு போட்டி 9 சுற்றுகளாக நடந்தது. இதில் இனியன் 7 சுற்றுகளில் வெற்றி பெற்றார். 2 சுற்றுகளை சமன் செய்தார். இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு போட்டி அமைப்பாளர்கள் சாம்பியன் கோப்பையை வழங்கினார்கள்.


Next Story