தேசிய குத்துச்சண்டை: அசாம் வீரர் ஷிவ தபா 'சாம்பியன்'


தேசிய குத்துச்சண்டை: அசாம் வீரர் ஷிவ தபா சாம்பியன்
x

ஷிவ தபா 5-0 என்ற கணக்கில் ரெயில்வே வீரர் அங்கித் நார்வாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஹிசார்,

ஆண்களுக்கான 6-வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் ஹிசார் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த 63 கிலோ எடைப்பிரிவின் இறுதிசுற்றில் ஆசிய போட்டியில் 6 பதக்கம் வென்றவரான அசாம் வீரர் ஷிவ தபா 5-0 என்ற கணக்கில் ரெயில்வே வீரர் அங்கித் நார்வாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

57 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் சர்வீசஸ் (முப்படை) வீரர் முகமது ஹூசாமுதீன் 4-1 என்ற கணக்கில் ரெயில்வேயின் சச்சினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் சர்வீசஸ் வீரர் நரேந்தரை எதிர்த்து மோத இருந்த சாகர் காயம் காரணமாக விலகியதால் நரேந்தர் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

இதேபோல் சர்வீசஸ் வீரர்கள் பிஷ்வாமித்ரா சோங்தாம் (51 கிலோ பிரிவு), சச்சின் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ) ஆகியோரும் தங்கப்பதக்கத்தை வென்றனர். சர்வீசஸ் அணி 6 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்துடன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ரெயில்வே அணி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், பஞ்சாப் ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் பிடித்தன.


Next Story