தேசிய விளையாட்டு போட்டி: போல்வால்ட்டில் தமிழக வீராங்கனை ரோசி புதிய தேசிய சாதனை


தேசிய விளையாட்டு போட்டி: போல்வால்ட்டில் தமிழக வீராங்கனை ரோசி புதிய தேசிய சாதனை
x

தேசிய விளையாட்டு போட்டியில் போல்வால்ட்டில் தமிழக வீராங்கனை ரோசி புதிய தேசிய சாதனை படைத்தார்.

காந்திநகர்,

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி கணிசமான பதக்கங்களை அறுவடை செய்தனர்.

பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது.

அந்த 8 ஆண்டு கால சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா தகர்த்தார். தமிழக வீராங்கனைகள் பவித்ரா (4 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், பாரனிகா (3.90 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா (11.55 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். அவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார். ஆந்திர வீராங்கனை ஜோதி (11.51 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்த போட்டியில் தேசிய சாதனையாளர் டுட்டீ சந்த் (ஒடிசா) 6-வது இடத்துக்கும், முன்னணி வீராங்கனை ஹிமா தாஸ் (அசாம்) 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கீர்த்தனா, கிரிதரணி, அர்ச்சனா உள்ளிட்டோர் அடங்கிய தமிழக அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. கேரளா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடைசி வாய்ப்பில் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அத்துடன் தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார்.

கடந்த ஆகஸ்டு மாதம் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற கேரள வீரர் முரளி ஸ்ரீசங்கர் (7.93 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு கேரள வீரர் முகமது அனீஸ் (7.92 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர்கள் இலக்கிய தாசன் (10.4 வினாடி), சிவக்குமார் (10.48 வினாடி) முறையே வெள்ளிப்பதக்கம், வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.

400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கதிரவன், ஜெயக்குமார், இலக்கிய தாசன், சிவகுமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.


Next Story