தேசிய விளையாட்டு: டிரையத்லானில் தமிழக அணிக்கு தங்கம்


தேசிய விளையாட்டு: டிரையத்லானில் தமிழக அணிக்கு தங்கம்
x

தேசிய விளையாட்டில் டிரையத்லான் அணிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.

ஆமதாபாத்,

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த டிரையத்லான்( நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் ஆகிய 3 பந்தயங்கள் அடங்கிய போட்டி) கலப்பு தொடர் பிரிவில் ஆகாஷ் பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. குஜராத் வெள்ளிப்பதக்கமும், மணிப்பூர் வெண்கலப்பதக்கமும் பெற்றது.

அறிமுக போட்டியான யோகாசனத்தில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதி ,கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோரை கொண்ட தமிழக அணி 125.36 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதே போல் யோகாசனம் ரித்மிக் ஜோடி பிரிவில் தமிழகத்தின் நிவேதா, அபிராமி ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

கம்பத்தின் மீது ஏறி சாகசம் புரியும் மல்லர்கம்பத்தில் பெண்கள் தனிநபர் ரோப் பிரிவில் தமிழகத்தின் சங்கீதா வெண்கலப் பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

கைப்பந்தில் தமிழகம் வெற்றி

கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் மேற்கு வங்காளம் 5-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்து மகுடம் சூடியது. நரோ ஹரி ஸ்ரேஸ்தா 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இதே போல் ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா, 'சடன்டெத்' முறையில் உத்தரபிரதேசத்தையும் ,பெண்கள் பிரிவில் அரியானா 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பையும் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

கைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான அரைஇறுதியில் தமிழக அணி 19-25, 23-25, 25-21, 25-22, 15-13 என்ற செட் கணக்கில் அரியானாவை போராடி தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

குத்துச்சண்டையில் லவ்லினா, ஜெய்ஸ்மைன் லம்போரியா, சஞ்ஜீத், முகமது ஹூசாமுத்தீன், சிம்ரன்ஜீத் கவுர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தனர்.

பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி 56 தங்கம் உள்பட 121 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என்று மொத்தம் 73 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

1 More update

Next Story