டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிரியங்கா சந்திப்பு


டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிரியங்கா சந்திப்பு
x

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது உறுதி அளித்தபடி டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க.எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களை அச்சுறுத்தியதாக 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் இழுத்தடிப்பதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யாததை எதிர்த்து வீராங்கனைகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது உறுதி அளித்தபடி டெல்லி போலீசார் அவர் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரிஜ் பூஷனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருப்பதால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேற்று காலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்தார். சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகளிடம் பேசிய அவர் தங்களது போராட்டத்துக்கு துணை நிற்போம் என்று தெரிவித்தார்.

பின்னர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், 'பிரிஜ் பூஷன் மீதான முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனை காண்பிக்காதது ஏன்?. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. அவரை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் இருக்கும் வரை நெருக்கடி இருக்கும்.

பிரதமரிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவருக்கு மல்யுத்த வீராங்கனைகள் மீது அக்கறை இருந்தால் அவர்களை அழைத்து பேசி இருக்க வேண்டும். இந்த பெண்கள் பதக்கம் வெல்லும் போது அவர்கள் நம் நாட்டின் பெருமை என்று எல்லோரும் 'டுவிட்' செய்கிறார்கள். ஆனால் தற்போது அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை செவிகொடுத்து கேட்க யாரும் இல்லை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதன் பிரதியை அவர்களிடம் பகிர்ந்து இருக்கலாமே?. போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுடன் ஒட்டுமொத்த தேசமும் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் குரல் எழுப்பி இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன்' என்று தெரிவித்தார்.


Next Story