புரோ கபடி லீக்: ஈரான் வீரர் பஸ்தாமியை ஏலம் எடுத்தது தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்: ஈரான் வீரர் பஸ்தாமியை ஏலம் எடுத்தது தமிழ் தலைவாஸ்
x

புரோ கபடி லீக் 10வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸ்தாமியை ரூ.30 லட்சத்திற்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.

புரோ கபடி லீக் 10வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. வீரர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஏலம் தொடங்கியது. முன்னணி வீரர்களை எடுக்க அணிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டன. முதல் நாளான நேற்று அதிகபட்சமாக பவன் ஷெராவத் ரூ.2.605 கோடிக்கு ஏலம் போனார்.

தமிழ் தலைவாஸ் அணியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அவரை ஏலம் எடுக்க தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் போன்ற அணிகள் போட்டி போட்டன. ஆனால் இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் ஏலத்தில் வென்றது.

அவரைத் தொடர்ந்து அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ஈரான் அணியின் கேப்டன் ஷட்லோய் சியானேஷ். இவரை ரூ.2.35 கோடிக்கு புனேரி பால்டன் அணி வாங்கியது.

கடந்த சீசனில் ஷெராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. ஆனால் முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் அந்த சீசன் முழுவதும் விளையாட முடியாமல் போனது.

இரண்டாம் நாளான இன்றைய ஏலத்தின்போது ஈரான் வீரர்கள் பஸ்தாமியை ரூ.30 லட்சத்திற்கும், முகமதுரேசா கபவுட்ரஹங்கியை ரூ.19.20 லட்சத்துக்கும் தமிழ் தலைவாஸ் அணி ஏலம் எடுத்தது. அமீர்முகமதுவை (ஈரான்) ரூ.68 லட்சத்துக்கு யு மும்பா அணி வாங்கியது. இதேபோல் முதல் நாளில் ஏலம் போகாத பல வீரர்கள் இன்று ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.


Next Story