2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு - மல்யுத்தம், வில்வித்தை நீக்கம்


2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு - மல்யுத்தம், வில்வித்தை நீக்கம்
x

2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் சேர்ப்பு, ஆனால் மல்யுத்தம், வில்வித்தை போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

மெல்போர்ன்,

1930-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்தது. அடுத்து 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உள்பட 4 நகரங்களில் 2026-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் இடம் பெறும் விளையாட்டுகள் குறித்த விவரத்தை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஆஸ்திரேலிய காமன்வெல்த் போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதில் நீச்சல், தடகளம், உள்பட மொத்தம் 20 விளையாட்டுகளில் 26 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான 9 விளையாட்டுகளில் போட்டி நடைபெறுகிறது.

சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கவேட்டை தொடர வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அத்துடன் பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியும் இடம் பெறுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும்.

2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 16 பதக்கங்கள் (7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்) வென்று இருந்தது. அதேநேரத்தில் மல்யுத்தம், வில்வித்தை ஆகியவை நீக்கப்பட்டு இருக்கின்றன. இது இந்தியாவுக்கு பின்னடவைவாகும். 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து காமன்வெல்தில் இடம் பெற்று வரும் மல்யுத்தத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் பதக்கம் வென்று சாதித்து வருகிறது.

இதில் பர்மிங்காமில் நடந்த போட்டியில் இந்தியா 6 தங்கம் உள்பட 12 பதக்கங்களை அள்ளி இருந்தது. 1982 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் மட்டும் அரங்கேறிய வில்வித்தை போட்டிகளின் முடிவில் இந்தியா பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.


Next Story