உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்றார்

Image Courtesy : @realmanubhaker twitter
இந்திய வீராங்கனை மானு பாகெர் 20 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
போபால்,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 20 புள்ளிகள் மட்டுமே எடுத்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 6-வது பதக்கம் இதுவாகும். உலக போட்டியில் பலமுறை தங்கப்பதக்கம் வென்று இருக்கும் அரியானாவை சேர்ந்த 21 வயதான மானு பாகெரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.
இந்த போட்டியில் ஜெர்மனி வீராங்கனை டோரீன் 30 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியு டு 29 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் சீனா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.






