உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றார்


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றார்
x

இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

கெய்ரோ,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியின் இறுதி சுற்றில் நடப்பு உலகச் சாம்பியன் ருத்ராங்ஷ் பட்டீல் 16-8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலன் அல்பிரிச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இதன் தகுதி சுற்றில் 7-வது இடத்தை பெற்ற ருத்ராங்ஷ் பட்டீல் ரேங்கிங் போட்டியில் முதலிடத்தை பிடித்ததுடன் இறுதி சுற்றிலும் அந்த ஆதிக்கத்தை நிலை நாட்டினார். மற்ற இந்திய வீரர்களான திவ்யநாஷ் சிங் பன்வார், ஹிடாய் ஹஜாரிகா ஆகியோர் தகுதி சுற்றில் முறையே 11-வது, 12-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

இந்த போட்டியில் இந்தியா வென்ற 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே முதல் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ரிதம் சங்வான்-வருண் தோமர் இணை தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பட்டீல்-நர்மதா நிதின் ஜோடி தங்கப்பதக்கமும் வென்று இருந்தது.


Next Story