உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கல பதக்கம் வென்றார் திலோத்தமா சென்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி:  வெண்கல பதக்கம் வென்றார் திலோத்தமா சென்
x
தினத்தந்தி 22 Feb 2023 4:55 AM GMT (Updated: 22 Feb 2023 5:21 AM GMT)

எகிப்தில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் திலோத்தமா சென் வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பிலான 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. ரைபிள் மற்றும் பிஸ்டல் ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டி ஒன்றில் டாப் 8 வீராங்கனைகளில் ஒருவராக (262.0 புள்ளிகள்) இந்திய வீராங்கனை திலோத்தமா சென் முன்னேறினார்.

இதனை தொடர்ந்து பதக்கத்திற்காக நடந்த போட்டியில், அவர் வெண்கல பதக்கம் வென்றார். 0.1 என்ற புள்ளி கணக்கில் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு நழுவி போனது.

இந்த போட்டியில் இங்கிலாந்து நாட்டின் சியோனைத் மெகிந்தோஷ் அதிரடியாக விளையாடி, சுவிட்சர்லாந்து நாட்டின் வீராங்கனை மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான நினா கிறிஸ்டன் என்பவரை 16-8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

திலோத்தமா சென்னின் பதக்க வெற்றியால் இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளன. இது 2-வது வெண்கல பதக்கம் ஆகும். தவிர இந்தியா 3 தங்க பதக்கங்களையும் வென்று உள்ளது.

இதேபோன்று பதக்க பட்டியலிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதற்கடுத்த நாட்களில் இன்னும் 4 இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.


Next Story