நாங்கள் போராட கூட கூடாதா...? ஒழுங்கீனம் என கூறிய பி.டி. உஷாவுக்கு சாக்ஷி மாலிக் கேள்வி


நாங்கள் போராட கூட கூடாதா...? ஒழுங்கீனம் என கூறிய பி.டி. உஷாவுக்கு சாக்ஷி மாலிக் கேள்வி
x

நாங்கள் போராட கூட கூடாதா...? என்று ஒழுங்கீனம் என கூறிய பி.டி. உஷாவுக்கு சாக்ஷி மாலிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்று, தேசிய கொடியின் பெருமையை உயர்த்தியவர்களில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பங்கும் பெருமளவில் உள்ளது.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் திடீரென கடந்த ஜனவரி 18-ந்தேதி மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி பூனியா கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்குவோம் என கூறினார்.

இதனை தொடர்ந்து அன்று மாலை, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பினரால் வீரர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தபோது, மனதளவில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை கொடுமைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் எனது வாழ்வை முடித்து கொள்ளலாம் என நான் நினைத்தேன். எந்தவொரு வீரர், வீராங்கனைக்கும் ஏதேனும் நடந்து விட்டால், அதற்கு தலைவரே பொறுப்பாவார் என்ற குற்றச்சாட்டை கூறினார்.

தொடர்ந்து அவர், பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்புக்கு சாதகமுடன் நடந்து கொள்ளும் சில ஆண் பயிற்சியாளர்கள், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக அணுகுகிறார்கள். அவர்கள் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

அவர்கள் (கூட்டமைப்பு) எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றனர். எங்களை சுரண்டுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் பதிலுக்கு மிரட்டப்படுகிறோம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், போராட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா? என கேட்டார்.

இதில் பதில் எதுவும் வராத நிலையில், அதன்பின்னர் அவர் தொடர்ந்து பேசும்போது, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார் என்று அதிரடியாக கூறினார்.

இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்தியாவின் உச்சப்பட்ச தேசிய விளையாட்டு கழகம் என கூறப்படும் இந்திய விளையாட்டு கழகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பிற வீரர், வீராங்கனைகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அதில் வலியுறுத்தியது.

டெல்லியில் நடந்து வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த விசயங்கள் மற்றும் காரணங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டது.

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின்னர் இந்த விசயம் அதிகம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்து உள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதுபற்றி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த 23-ந்தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, 3 மாதங்கள் கடந்து விட்டன.

எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களுக்கு நியாயம் வேண்டும். இன்னும், எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை. டெல்லி மகளிர் ஆணையம் எங்களுக்கு ஆதரவு அளித்து இருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறோம் என கூறினார்.

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தவறிய நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாங்கள் தொடர்ந்து மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இது வீராங்கனைகளின் மரியாதை தொடர்பான விசயம். விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 3 மாதங்கள் கடந்தோடி விட்டன என அவர்கள் தெரிவித்தனர்.

சிறுமி உள்பட 7 இளம்பெண்கள் பிரிஜ்பூஷண் சிங்கிற்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தும் இன்னும் அது பதிவு செய்யப்படவில்லை. போக்சோ வழக்கும் பதிவாக வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா கூறும்போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருக்களில் போராடுவது என்பது ஒழுங்கீனம். இந்தியாவின் மதிப்பை அது சீர்குலைக்கிறது என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

இதுபற்றி, சாக்ஷி மாலிக் கூறும்போது, பி.டி. உஷாவை நான் மதிக்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால், நான் கேட்க விரும்புவது, மேடம் மல்யுத்த வீராங்கனைகள் முன்னே வந்து இருக்கிறோம்.

துன்புறுத்தல் விவகாரம் பற்றி எழுப்பி இருக்கிறோம். நாங்கள் போராட கூட கூடாதா...? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழுவில் நாங்கள் எங்களுடைய வாக்குமூலங்களை அளித்து இருக்கிறோம். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழு உறுப்பினர்களும் அதனை கேட்டு கொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.


Next Story