மாநில கூடைப்பந்து: அரைஸ், ரைசிங் ஸ்டார் அணிகள் 'சாம்பியன்'


மாநில கூடைப்பந்து: அரைஸ், ரைசிங் ஸ்டார் அணிகள் சாம்பியன்
x

பெண்கள் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் ரைசிங் ஸ்டார் அணி (சென்னை) 68-67 என்ற புள்ளி கணக்கில் எஸ்.பி.சி. அணியை பதம் பார்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 17-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில் அரைஸ் அணி 96-93 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அரைஸ் அணியில் சூர்யா 29 புள்ளிகளும், ஆனந்த் 26 புள்ளிகளும் எடுத்தனர். இந்தியன் வங்கி 2-வது இடம் பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் லயோலா அணி 93-84 என்ற புள்ளி கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை சாய்த்து 3-வது இடத்தை தனதாக்கியது. லயோலா அணியில் அபினாஷ் 31 புள்ளிகளும், சுபின் வேல் 15 புள்ளிகளும் சேர்த்தனர். எஸ்.டி.ஏ.டி. 4-வது இடம் பெற்றது.

பெண்கள் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் ரைசிங் ஸ்டார் அணி (சென்னை) 68-67 என்ற புள்ளி கணக்கில் எஸ்.பி.சி. அணியை பதம் பார்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ரைசிங் ஸ்டார் அணியில் கிருத்திகா 20 புள்ளிகளும், ஏஞ்சல் ஜீவிதா, நிவேதா ஸ்ரீ தலா 11 புள்ளிகளும் எடுத்தனர். எஸ்.பி.சி. அணி 2-வது இடம் பெற்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்துஸ்தான் ஜாமெர்ஸ் 58-39 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்து 3-வது இடத்தை சொந்தமாக்கியது. இந்துஸ்தான் அணியில் சங்கமித்ரா 19 புள்ளிகளும், தலிதா 16 புள்ளிகளும் சேர்த்தனர். தமிழ்நாடு போலீஸ் 4-வது இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் சினோரா அசோக் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.40 ஆயிரம், 30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்க செயலாளர் அஜிஸ் அகமது, போட்டி அமைப்பு குழு செயலாளர் சம்பத் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story