ரஷிய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு
ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்ய சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மும்பை,
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி,) கூட்டம் மும்பையில் வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னதாக ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்வது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியா அந்த நாட்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரத்தின் கீழ் உள்ள பிராந்திய விளையாட்டு அமைப்புகளை தங்களது ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களாக சேர்க்க கடந்த 5-ந் தேதி ஒருதலைபட்சமாக முடிவெடுத்தது.
ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்த செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது. தடை காரணமாக ரஷிய வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் ரஷிய நாட்டு பெயரில் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் இனிமேல் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும்.