ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்வீர் சித்துக்கு வெள்ளிப்பதக்கம்


ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்வீர் சித்துக்கு வெள்ளிப்பதக்கம்
x

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 17-வது கோட்டா இதுவாகும்.

ஜகர்த்தா,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் விஜய்வீர் சித்து 28 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். கஜகஸ்தான் வீரர் நிகிதா சிர்யுகின் 32 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், தென்கொரியாவின் ஜோங் ஹோ சாங் 23 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். சண்டிகாரை சேர்ந்த 21 வயதான விஜய்வீர் சித்து தகுதி சுற்றில் 577 புள்ளிகள் குவித்து 4-வது இடம் பிடித்து 6 வீரர்களில் ஒருவராக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 17-வது கோட்டா இதுவாகும். இந்த பிரிவில் ஏற்கனவே இந்திய வீரர் அனிஷ் பனவாலா கடந்த ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 12 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.


Next Story