உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

image courtesy: World Archery twitter
உலக விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
பர்மிங்காம்,
உலக விளையாட்டு வில்வித்தை பந்தயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
இதில் காம்பவுண்ட் பிரிவில் அணிகளுக்கான கலப்பு அரைஇறுதியில் 2 புள்ளி வித்தியாசத்தில் கொலம்பியாவிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வென்னம் ஜோடி அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மெக்சிகோவின் ஆன்ட்ரீயா பெசிரா- மிக்யூல் பெசிரா இணையை எதிர்கொண்டது.
திரில்லிங்கான இந்த மோதலில் அபிஷேக்-ஜோதி சுரேகா ஜோடி 157-156 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக விளையாட்டு வில்வித்தை வரலாற்றில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். முன்னதாக இதன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கனடாவின் கிறிஸ்டோபர் பெர்கின்சிடம் 145-148 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.






