உலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி


உலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

ஜெஸ்வின் ஆல்ட்ரின் (image courtesy: AFI via ANI)

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

புடாபெஸ்ட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8 மீட்டர் நீளம் தாண்டினார். அடுத்த இரு முயற்சியில் 'பவுல்' செய்தார். என்றாலும் 12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு 12-வது வீரராக தகுதி பெற்றார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியர் இவர் தான். தூத்துக்குடி மாவட்டம் முதலுரைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடந்த மார்ச் மாதம் தேசிய சாதனையாக 8.42 மீட்டர் நீளம் தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 3 வாய்ப்புகளில் முறையே 7.74 மீட்டர், 7.66 மீ., 6.70 மீ. நீளம் தாண்டி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டு தகுதி சுற்றோடு நடையை கட்டினார். ஸ்ரீசங்கர் பல போட்டிகளில் 8 மீட்டர் தூரத்தை எளிதில் கடந்திருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் அவர் 8 மீட்டரை நெருங்காதது ஆச்சரியம் அளித்தது. அவர் கடந்த ஆண்டு உலக தடகளத்தில் இறுதிசுற்றில் கால்பதித்திருந்தது நினைவிருக்கலாம். ஜமைக்காவின் வெய்ன் பினோக் 8.54 மீட்டர் நீளம் தாண்டி தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்தார். பதக்கமேடையில் ஏறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் 12 பேர் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

பெண்களுக்கான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் மொத்தம் 34 வீராங்கனைகள் தங்களது திறமையை காட்டினர். இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 57.05 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 19-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார். முந்தைய இரு உலக தடகள போட்டியில் இறுதிசுற்றை எட்டியிருந்த 30 வயதானஅன்னு ராணி இந்த முறை தனது சிறந்த செயல்பாட்டை கூட (63.24 மீட்டர்) நெருங்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.

முன்னதாக பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் யர்ராஜி ஜோதி 13.05 வினாடிகளில் இலக்கை கடந்து தகுதி சுற்றோடு பின்வாங்கினார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாம்பியன் இத்தாலி வீரர் கியான்மார்கோ தம்பேரி, அமெரிக்காவின் ஜூவான் ஹாரிசன் இருவரும் அதிகபட்சமாக தலா 2.36 மீட்டர் உயரம் தாண்டி சமநிலையில் இருந்தனர். 2.38 மீட்டர் உயரத்தை தொடுவதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இருவரும் சமநிலை வகித்தாலும் ஹாரிசன் 2.36 மீட்டர் உயரத்தை தனது 2-வது முயற்சியில் தான் எட்டினார். ஆனால் தம்பேரி தனது முதல் வாய்ப்பிலேயே அதை தாண்டினார். அதன் அடிப்படையில் தம்பேரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உலக தடகளத்தில் ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஹாரிசனுக்கு வெள்ளிப்பதக்கமும், கத்தாரின் முதாஷ் பார்ஷிமுக்கு (2.33 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.

பெண்களுக்கான வட்டு எறிதலில் அமெரிக்க வீராங்கனை லாலாகா தசாகா 69.49 மீட்டர் தொலைவுக்கு வட்டுவை வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 65.56 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மகுடம் சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் சாம்பியனும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையுமான வலரி அல்மான் 69.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

23 வயதான தசாகா கூறுகையில், 'கடந்த இரு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்துக்கு (12-வது) தள்ளப்பட்டேன். 12-ல் இருந்து இப்போது முதலிடத்துக்கு வந்திருப்பதை நம்ப முடியவில்லை. நான் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று விட்டேன். இது நிஜமா என்றே என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறி சிலாகித்தார்.


Next Story