மியாமி ஓபன் டென்னிஸ்: எகடெரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்:  எகடெரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

எகடெரீனா நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்த்து விளையாட உள்ளார்.

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில், உலக தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ரஷியாவை சேர்ந்த எகடெரீனா அலெக்சாண்டிரோவா மற்றும் 5-வது இடம் வகிக்கும் ஜெஸ்சிகா பெகுலா விளையாடினர்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் ஜெஸ்சிகாவின் கை ஓங்கி இருந்தது. அவர் 3-6 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். எனினும், அடுத்தடுத்த செட்களில் எகடெரீனா அதிரடியாக விளையாடி, வெற்றியை வசப்படுத்தினார்.

அவர், இதற்கு முந்தின சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். அதற்கு அடுத்து, டாப் 5 பட்டியலில் உள்ள மற்றொரு வீராங்கனையை வீழ்த்தி உள்ளார். அவர் நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்த்து விளையாட உள்ளார்.

வெற்றிக்கு பின்னர் எகடெரீனா கூறும்போது, பெகுலா ஆச்சரியப்படும் வகையில் விளையாடினார். அதனால், விளையாட எனக்கு மிகவும் கடினம் ஆகவே இருந்தது. 3-வது செட்டில் அவரை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அந்த வகையில், அதிரடியாக விளையாடினார். எனினும், அதற்கு இணையாக நான் விளையாடினேன்.

ஒவ்வொரு தனி புள்ளியையும் பெறுவதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டேன். எல்லா இடத்திலும் அவர் சிறப்பாக விளையாடினார் என எனக்கு தெரியும். அதனால் பொறுமையாக இருக்க முயற்சித்தேன். எனக்கு கிடைத்த எந்த வாய்ப்பானாலும், பயன்படுத்தி கொள்ள முயற்சித்தேன் என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story