தேர்தல் வரும் பின்னே; சிலிண்டர் விலை குறையும் முன்னே..!


தேர்தல் வரும் பின்னே; சிலிண்டர் விலை குறையும் முன்னே..!
x

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு பரிசாக அனைத்து சிலிண்டர்களின் விலையும் ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து மாநிலங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார். அப்படி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பலனளிக்கும் திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதுபோல, பல அறிவிப்புகளையும் செய்து வருகிறார். எனவே, ஒவ்வொரு நாளும் பிரதமர் நரேந்திரமோடி இன்று என்ன அறிவிப்பை நமக்காக வெளியிடப்போகிறாரோ?, மந்திரிகள் ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவார்களா? மத்திய அரசாங்கம் சார்பில் அறிவிப்புகள் வருமா? என மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அந்தவகையில், கடந்த வாரம் வியாழக்கிழமையன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஏழை குடும்பங்களுக்கு 'டெபாசிட்' இல்லாமல் இலவச கியாஸ் சிலிண்டர் பதிவுகளை வழங்கும் 'பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்' கீழ் கியாஸ் சிலிண்டர் பெறும் இணைப்புகளுக்கு ரூ.300 மானியமாக கொடுக்கும் திட்டம் இந்த மாதத்தோடு முடிவடைய இருந்தது. அதனை மேலும் ஒரு ஆண்டுக்கு அதாவது, வருகிற ஏப்ரல் மாதம் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த திட்ட பயனாளிகளுக்கு வருகிற நிதியாண்டில் 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியமாக கிடைக்கும். கடந்த 1-ந்தேதி கணக்குப்படி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் 10 கோடியே 27 லட்சம் குடும்பங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

உஜ்வாலா திட்டப்பயனாளிகளுக்கு மட்டுமல்ல, மானியம் பெறாத மற்ற பயனாளிகளுக்கும், இனிக்கும் செய்தியாக அடுத்தநாளே அதாவது, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திரமோடி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு பரிசாக அனைத்து சிலிண்டர்களின் விலையும் ரூ.100 குறைக்கப்படும் என அறிவித்தார். இந்த விலை குறைப்பினால் 32 கோடி குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும். இதனால், சென்னையில் இதுவரை 918 ரூபாய் 50 காசுக்கு வாங்கிவந்த கியாஸ் சிலிண்டரின் விலை, இப்போது 818 ரூபாய் 50 காசாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி 'எக்ஸ்' வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'மகளிர் தினத்தன்று கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இது நமது பெண் சக்திக்கு பலனளிக்கும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும்' என்று பதிவிட்டிருந்தார். இது இல்லத்தரசிகளுக்கு மனம் குளிரும் செய்தி. ஆனால், எதிர்க்கட்சிகள் இது தேர்தல் 'ஸ்டண்ட்' என்கிறார்கள்.

இதுபோலத்தான் கடந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல் வரும் முன்பு, ஆகஸ்டு மாதத்தில் ஒரு சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பெண்களைப் பொறுத்தமட்டில், 'தேர்தலுக்காகவே என்றாலும், இந்த விலை குறைப்பு எங்கள் செலவை குறைக்கிறது. எனவே எங்களுக்கு இதில் பெருமகிழ்ச்சி' என்ற உணர்வே இருக்கிறது. பெண்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்து பரிசளித்துவிட்டீர்கள், இதுபோல பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அனைவருக்கும் ஏன் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமே பலனாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. தேர்தல் வருவதால் அதுவும் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.


Next Story