காலாவதியாகிறது பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா


காலாவதியாகிறது பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா
x

பெண்கள் 18 வயதான பிறகும் ஆண்கள் 21 வயதான பிறகும்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது.

17-வது மக்களவையின் இறுதி கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி கடந்த வாரம் சனிக்கிழமை முடிந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ஜனாதிபதி முர்மு வந்தது, இதுதான் முதல் முறையாகும். அதுபோல புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரும் இப்போதுதான் நடந்து முடிந்தது. இந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 'பசுமை நிறைந்த நினைவுகளே, பாடிக்களித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம்' என்று தங்கள் பதவிக்காலம் முடியும் தருவாயில் விடைபெற்று சென்றுவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் இதுவரை 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியிருக்கின்றன. அவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் 5 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன.

இந்த கூட்டத்தொடரில் இவை நிறைவேற்றப்படவில்லை என்பதால் காலாவதியாகிவிட்டது. அப்படியே 5 மசோதாக்களும் காலாவதியாகிவிட்டாலும், இதுவரை நடந்த மக்களவைகளில் காலாவதியான மசோதாக்களின் எண்ணிக்கையை விட இந்த நாடாளுமன்றத்தில்தான் குறைவான எண்ணிக்கையில் மசோதாக்கள் காலாவதியாகியிருக்கிறது என்ற வரலாற்றை படைத்துள்ளது. காரணம் கடந்த 13-வது மக்களவையில் 46 மசோதாக்களும், 14-வது மக்களவையில் 36 மசோதாக்களும், 15-வது மக்களவையில் 60 மசோதாக்களும் கடந்த 16-வது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 45 மசோதாக்களும் காலாவதியாகியிருக்கிறது. இந்த மக்களவையில் காலாவதியான ஒரு மசோதா பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்தும் மசோதாவாகும். இப்போது பெண்கள் 18 வயதான பிறகும் ஆண்கள் 21 வயதான பிறகும்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றமாகும்.

இந்தநிலையில் பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக 21 வயதாக நிர்ணயிக்கும் வகையில் ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது பெண்களின் திருமண வயது 18 அல்ல, ஆண்களைப்போல 21 வயதுதான் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. திருமணத்தை நிர்ணயிப்பது அந்த பெண்ணின் பெற்றோர்தான். அதுபோல தான் திருமணம் செய்துகொள்வதையும் அந்த பெண்தான் தீர்மானிக்க வேண்டும்.

சில குடும்ப சூழ்நிலை காரணமாக 18 வயதிலேயே ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆக இதை அந்த பெண்ணும், அவருடைய குடும்பத்தாரும்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நாடுமுழுவதும் மட்டுமல்ல, அவையிலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே இரு அவைகளிலும் இந்த மசோதா நாடாளுமன்றக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்ய்யப்பட்ட நேரத்தில் நாடாளுமன்றக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

குழந்தை திருமண தடை (திருத்தம்) மசோதா என்று அழைக்கப்படும் இந்த மசோதா, நாடாளுமன்றக்குழு பரிசீலனை முடிந்து இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடிகிற நிலையில், இந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது. அடுத்து தேர்தல் முடிந்து புதிதாக ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் முடிவில்தான் இந்த மசோதா உயிர்பெறுமா? என்பது நிர்ணயிக்கப்படும். ஆனால் திருமணத்தை சட்டம் போட்டு நிர்ணயிப்பதற்கு பதிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையே முடிவெடுக்க வைப்பதுதான் நல்லது. இது பெண்ணுடைய, அவருடைய பெற்றோருடைய உரிமை. இதில் அரசாங்கம் தலையிடாமல் இருந்தாலே சிறப்பு என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.


Next Story