மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு!


மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு!
x

இந்தியா முழுவதும் இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது.

இந்தியா முழுவதும் இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது. சமூக நீதி நிலை நாட்டப்படவும், பின் தங்கியவர்கள், நலிந்தவர்கள் யார்-யார்? அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. மத்திய அரசாங்கமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் வலுத்துவரும் நிலையில், பீகார், கர்நாடகம், ஒடிசா போன்ற மாநிலங்கள் அவர்களாகவே தங்கள் மாநில ரீதியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திவிட்டன. இப்போது 4-வது மாநிலமாக ஆந்திராவிலும், சாதி வாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்தியாவில் 1931-ம் ஆண்டுதான் சாதிவாரி கணக்கெடுப்பு என்று தனியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் மக்கள் தொகை இவ்வளவு என்று அவர்களாகவே ஒரு கணக்கை சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு சாதியினரையும் அழைத்து பேசினார். அப்போது ஒவ்வொரு சாதியினரும் தங்கள் மக்கள் தொகை இவ்வளவு என்று கூறும் கணக்கை கூட்டினால், தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகமாக வருகிறது என தனக்கு நெருங்கியவர்களிடம் அவர் சொன்னார்.

ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இதுமட்டுமல்லாமல், தேசிய அளவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இந்த கணக்கெடுப்பு உதவுமா? என்பதும் சந்தேகமே. அதனால்தான் தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் நன்மை பயக்கும் என்ற வகையில், சாதிவாரி கணக்கெடுப்பை தனியாக நடத்தாமல், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்திட வேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களால் விடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு 'சென்சஸ்' என்று சொல்லப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இப்போது நடத்தப்பட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டபூர்வமான மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலை நாட்டிட இயலும் என்றும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கம் இந்த கோரிக்கையை ஏற்று, அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையென்றால், நீதி கட்சியின் தொடக்க நாளான கடந்த மாதம் 27-ந் தேதி சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் சிலையை சென்னையில் திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசாங்கத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை.


Next Story