லைசென்சு வாங்க கார் வேண்டாம்!


லைசென்சு வாங்க கார் வேண்டாம்!
x

தினமும் காரை பயன்படுத்தும் வசதி படைத்தவர்கள் வீடுகளில் டிரைவர்களை தனியாக நியமிக்கிறார்கள்.

படித்து முடித்தவர்கள் மட்டுமல்லாமல் படிக்காதவர்கள் கூட ஏதாவது வேலைக்கு போக முடியுமா? சம்பளம் கிடைக்குமா? என்று ஏங்கிக் கிடக்கிறார்கள். பொதுவாக வேலைக்கு செல்ல விண்ணப்பிக்கும் போது, குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி குறைந்தபட்ச கல்வி தகுதி இல்லாதவர்களுக்கும் வேலை கிடைக்குமா என்றால் நிச்சயமாக முடியும். அந்த வேலையில் நல்ல வருமானமும் கிடைக்கும். அது என்ன வேலை என்றால் மோட்டார் வாகன டிரைவர் வேலைதான்.

இப்போது நாள்தோறும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் கார் வாங்க முடியும் என்ற நிலை இப்போது இல்லை. இப்போதெல்லாம் வங்கிகள் கார் வாங்க குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு வேலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் நல்ல சம்பளம் கிடைப்பதாலும், எல்லோருமே கார் வாங்கி விடுகிறார்கள். தினமும் காரை பயன்படுத்தும் வசதி படைத்தவர்கள் வீடுகளில் டிரைவர்களை தனியாக நியமிக்கிறார்கள்.

வாரத்தில் எப்போதாவது காரை பயன்படுத்தும் நடுத்தர மக்கள் அந்த ஓரிரு நாட்களுக்கு மட்டும் தற்காலிக டிரைவர் அதாவது, 'ஆக்டிங்' டிரைவரை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அரை நாளுக்கு இவ்வளவு, முழு நாளுக்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த ஆக்டிங் டிரைவர்களுக்கு இப்போது நல்ல கிராக்கி இருக்கிறது. கொஞ்ச நாட்கள் வேலை பார்த்து விட்டு லாரி, பஸ் ஓட்டும் கனரக வாகனங்களை ஓட்ட தனியாக 'ஹெவி லைசென்சு' எடுத்துவிட்டால், லாரி டிரைவராகவோ, பஸ் டிரைவராகவோ ஆகி விட முடியும்.

மோட்டார் வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற இலகுரக வாகனங்கள், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு தனித்தனியாக லைசென்சு பெற வேண்டி இருக்கிறது. கார் ஓட்ட உரிமம் இருந்தாலும், கனரக பஸ், லாரிகள் ஓட்ட தனியாக உரிமம் பெற வேண்டும். ஆக, அடிப்படை கார் லைசென்சுதான். இந்த டிரைவிங் உரிமம் பெற அடிப்படை கல்வித் தகுதி ஏதும் இல்லை. அப்படி லைசென்சு பெற செல்லும்போது காரை ஓட்டிக்காட்ட ஒரு கார் வேண்டும் என்பதால், அதற்காகவே டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று பணம் கட்டி அவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு போக்குவரத்து அலுவலகங்களில் தேர்வுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் சிரமப்பட்டு வந்தார்கள்.

அத்தகையவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்களில் லைசென்சு எடுக்க வருபவர்களுக்காக 145 கார்களை தமிழக அரசு வாங்கியுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் இந்த கார்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதற்காக குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 விண்ணப்பப் படிவத்தோடு வசூலிக்கப்படுகிறது.

ஆக டிரைவிங் லைசென்சுக்காக அரசே கார் கொடுக்கும் இந்த திட்டம் லைசென்சுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு செலவை குறைக்கிறது, அதிக பொருட்செலவு இல்லாமல் லைசென்சு வாங்கி புதுவாழ்வை தொடங்க முடியும் என்ற வகையில், அரசின் இந்த நடைமுறை மிகவும் வரவேற்புக்குரியது. இதுபோல கனரக வாகனங்களை ஓட்டுவதற்காக ஹெவி லைசென்சுக்கு விண்ணப்பிப்பவர்களுக்காகவும் ஒவ்வொரு அலுவலகத்திலும் அரசு துறைகளில் பயன்படுத்திய பழைய லாரி, பஸ்களை வைத்து இருந்தால் பயனாக இருக்குமே என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story