மாநில பட்டியலில் கல்வி!


மாநில பட்டியலில் கல்வி!
x

1976-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் விடுத்துவரும் கோரிக்கைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று கடும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

1976-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் விடுத்துவரும் கோரிக்கைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நமக்கென ஒரு அரசியல் சட்டத்தை மேதைகள் வடிவமைத்தனர். இந்தியா ஒரு கூட்டாட்சி கொண்ட ஜனநாயக நாடு என்ற வகையில், மத்தியில் பிரதமர் தலைமையில் மத்திய அரசாங்கமும், மாநிலங்களில் முதல்-அமைச்சர்கள் தலைமையில் மாநில அரசும் இயங்கும் வகையில், இந்திய ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. அப்போது, மாநில அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மாநில பட்டியலிலும், மத்திய அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மத்திய பட்டியலிலும், மத்திய-மாநில அரசுகளின் கூட்டு கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் பொது பட்டியலிலும் இருக்கும் வகையில் பிரித்து, அரசியல் சட்டத்திலேயே அட்டவணைப்படுத்தப்பட்டன.

அந்த வகையில், கல்வி மாநில பட்டியலில் இருக்குமாறு அரசியல் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி மொழி, கலாசாரம், பண்பாடு என்று வித்தியாசமான நிலை இருப்பதை கருத்தில் கொண்டு, கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப்பட்டது. அந்த வகையில், கல்வி மாநில பட்டியலில் இருந்தபோது வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் படித்த பலர், அனைத்து துறைகளிலும் பிரகாசித்தார்கள். இவ்வாறு மாநில பட்டியலில் கல்வி சரியான பாதையில் சென்று கொண்டிருந்தபோது, 1976-ம் ஆண்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம், மாநில பட்டியலில் இருந்த கல்வி, வனம், வன உயிரினங்கள், பறவைகள் பாதுகாப்பு, நீதி பரிபாலனம், எடைகள் மற்றும் அளவுகள் ஆகிய துறைகளை அரசியல் சட்டத்தில் உள்ள 7-வது அட்டவணையில் இருக்கும் பொது பட்டியலுக்கு மாற்றியது. இதன் மூலம் கல்வி மத்திய-மாநில அரசுகள் கைகளுக்கு போனது.

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே இதற்கு பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால், இதுவரை இந்த கோரிக்கைகளுக்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இப்போது, 'நீட்' தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கல்வி மாநில பட்டியலில் இருந்திருந்தால் 'நீட்' தேர்வே வந்து இருக்காது. அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கும். இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்கு நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும் மாநில பட்டியலில் இணைக்கப்படவேண்டும். குறிப்பாக, கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். அதைச் செய்தால்தான் 'நீட்' போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும்" என்று பேசினார்.

இது நியாயமான கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், மாநில அரசு கல்விக்குத்தான் அதிக நிதியை உருவாக்கும் நிலையில், கல்வி சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை, மாநில அரசுகளுக்கு இருக்கவேண்டும் என்றால், கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படுவதே சரியானதாக இருக்க முடியும். எனவே, நெருக்கடிநிலை நேரத்தில் எடுக்கப்பட்ட எத்தனையோ முடிவுகளை விமர்சனம் செய்துவரும் பா.ஜ.க அரசு, அப்போது மாநிலப்பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும் என்பது கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

1 More update

Next Story