வீடுதோறும் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்!


வீடுதோறும் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்!
x

“சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” என்ற முகமது இக்பால் எழுதிய பாடலை, லதா மங்கேஷ்கர் பாடியதை கேட்கும்போது, ஒவ்வொரு இந்தியனின் உடலும் தேசப்பற்றால் சிலிர்க்கும்.

"சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்ற முகமது இக்பால் எழுதிய பாடலை, லதா மங்கேஷ்கர் பாடியதை கேட்கும்போது, ஒவ்வொரு இந்தியனின் உடலும் தேசப்பற்றால் சிலிர்க்கும். "உலகில் எல்லாவற்றையும்விட என் நாடு இந்தியாதான் உயர்ந்தது" என்பதுதான் இதன் பொருள். இந்தப் பாடலின் பின்னணியில் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கும். தேசிய கொடியை பார்க்கும்போதே, இந்தியா என் நாடு, இந்திய மக்கள் எல்லோரும் இந்திய தாயின் பிள்ளைகள் என்ற உணர்வு ஏற்படும்.

ஒவ்வொரு சுதந்திர நாட்டுக்கும் என சொந்தமாக ஒரு கொடி உண்டு. அது அந்த சுதந்திர நாட்டின் அடையாளமாகும். இப்போது நாம் பறக்கவிடும் தேசிய கொடி 22-7-1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியபோது, இந்திய தேசிய கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த நன்னாளில் முதன்முதலாக ஏற்றப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் பிறந்த பிங்காலி வெங்கையா என்பவர் 1921-ம் ஆண்டு மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து, தான் வடிவமைத்த தேசிய கொடியை வழங்கினார்.

2002-க்கு முன்பு தேசிய கொடியை தங்களுக்கு விருப்பமான இடங்களில் யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாதபடி தடை இருந்தது. ஆனால், 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றி மகிழலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. சூரிய உதயத்தின்போது கொடி ஏற்றி, சூரியன் மறையும்போது இறக்கிவிட வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

நமது தேசிய கொடி மூவர்ண கொடியாகும். இந்த மூவர்ண கொடி பல உயரிய தத்துவங்களை உள்ளடக்கியது. மேலே காவி நிறத்திலும், நடுவில் வெள்ளை நிறத்திலும், கீழ் பகுதியில் பச்சை நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியின் நடுவில் உள்ள வெள்ளை பகுதியில் அசோக சக்கரம் இருக்கும். காவி நிறம் என்பது நாட்டின் வலிமையையும், துணிச்சலையும் குறிக்கிறது. அசோக சக்கரத்துடன் கூடிய வெள்ளை பகுதி அமைதியையும், உண்மையையும், பச்சை பகுதி இந்த நாட்டின் வளம், வளர்ச்சி மற்றும் மங்கலத்தை பறை சாற்றுகிறது.

இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் மத்திய அரசாங்க உள்துறையின் "ஹர் கர் திரங்கா", அதாவது "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி" என்ற முனைப்புக்கேற்ப நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பொதுவாக எல்லோரும் அவரவர் தங்கள் படத்தையோ அல்லது தங்களுக்கு பிடித்த படத்தையோ முகப்பு படமாக வைக்கிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திரமோடி அனைவரும் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது சமூகவலைதள பக்கங்களில் இதை செய்து முன்மாதிரியாகிவிட்டார்.

இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். அந்த நாட்களில் தேசிய கொடியை இரவும், பகலும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 13-ந்தேதிக்கும் 15-ந்தேதிக்கும் இடையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நம் தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்க செய்யுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் மீண்டும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவோம். பிரதமரின் வேண்டுகோளையேற்று மக்கள் அனைவரும் தேசிய கொடியை தங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஏற்றி இந்த நாட்டின் மீது நமக்குள்ள பற்றை உறுதிப்படுத்துவோம்.


Next Story