வானிலை ஆய்வு மையம் நவீனப்படுத்தப்பட வேண்டும்


வானிலை ஆய்வு மையம் நவீனப்படுத்தப்பட வேண்டும்
x

2023-ம் ஆண்டை வரலாறு ஒரு போதும் மறக்காது என்ற வகையில், இந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் சென்னையையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் மிக்ஜம் புயல்-மழை புரட்டிப்போட்டுவிட்டது.

2023-ம் ஆண்டை வரலாறு ஒரு போதும் மறக்காது என்ற வகையில், இந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் சென்னையையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் மிக்ஜம் புயல்-மழை புரட்டிப்போட்டுவிட்டது. இவ்வளவு சேதம் ஏற்பட்டு விட்டதே எப்படி மீளப்போகிறோம்? என்று குழம்பிக்கொண்டு இருந்த நிலையில், பட்ட காலிலேயே படுவது போல, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழையால் பேரழிவு ஏற்பட்டு, அதன் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு, இனி மீண்டுவந்து மீண்டும் புதிதாக வாழ்க்கையை தொடங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1923-ம் ஆண்டில் இதுபோல பேரழிவை ஏற்படுத்திய பெருமழை பெய்திருக்கிறது என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் 1871-ம் ஆண்டுக்கு பிறகே இப்படி ஒரு பேய் மழை பெய்துள்ளது. அதன்பிறகும் பலமுறை கனமழை பெய்து இருந்தாலும், இப்போது பெய்த அதீத கனமழையால் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு இணையேயில்லை. பொதுவாக, ஒரு நாளில் 6 செ.மீ. வரை பெய்யும் மழை மிதமான மழை என்றும், 6 முதல் 11 செ.மீ. வரை பெய்தால் கனமழை என்றும், 11 முதல் 20 செ.மீ. வரை மிக கனமழை என்றும், 20 செ.மீ.க்கு மேல் அதிகனமழை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ. மழை பெய்ததை, எந்த அளவில் அதை வகைப்படுத்துவது? என்று புரியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 40 செ.மீ.க்கு மேல் 12 இடங்களில் மழைபெய்து, எல்லா இடங்களிலும் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும் நதிபோல, எங்கும் தண்ணீர் சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளம்போல அழிவை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழையை கணிக்கும் 3 கருவிகள் இருக்கின்றன. இருந்தும், இப்படி ஒர் அதீத கனமழை பெய்யும் என்று அவர்களால் முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. "கடுமையான மழைப்பொழிவு 17 மற்றும் 18-ந்தேதிகளில் ஏற்படும் என்பதை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17-ந்தேதிதான் அறிவித்தது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, நெல்லையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டபின் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும், வானிலை ஆராய்ச்சி மையம் சொன்ன மழை அளவுக்கு அதிகமாக மழை பொழிவு இருந்தது. இந்த மாவட்டங்களில், வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ''அமெரிக்காவில் இந்த தேதியில், இந்த இடத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று சில நாட்களுக்கு முன்பே துல்லியமாக வானிலை ஆராய்ச்சி மையத்தால் கணித்து சொல்லப்படுகிறது. அந்த அளவு சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையமும் நவீனப்படுத்தப்படவேண்டும்'' என்று சொன்னது, நூற்றுக்கு நூறு சரியான கருத்தாகும்.

எதிர்காலத்தில் இதுபோல அதீத கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டால், வானிலை ஆய்வு மையம் அதை முன்பே கணித்து சொன்னால்தான் அரசும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள முடியும். மக்களும் தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


Next Story