அரசு பள்ளிக்கூடங்களில் 'நீட்' பயிற்சி


அரசு பள்ளிக்கூடங்களில் நீட் பயிற்சி
x

பிளஸ்-2 வகுப்பில் அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பில் முதல் தேர்வாக மருத்துவப் படிப்புதான் இருக்கும்.

பிளஸ்-2 வகுப்பில் அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பில் முதல் தேர்வாக மருத்துவப் படிப்புதான் இருக்கும். இதற்காக 'நீட்' தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் இருக்கிறது. 'நீட்' தேர்வுக்காக சாதாரணமாக படிப்பவர்களைவிட அதற்கான பயிற்சி மையங்களில் படிக்க வசதியுள்ளவர்களால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடிகிறது. இதனால் வசதி படைத்தவர்களின் வீட்டு பிள்ளைகளாலும், நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்களாலும் மட்டுமே 'நீட்' பயிற்சி மையங்களில் படித்து மருத்துவப்படிப்பில் சேர முடிந்தது.

'நீட்' தேர்வில் தகுதிபெற முடியாததால், மருத்துவப்படிப்பில் சேர முடியவில்லையே என்ற ஏக்கத்தில், இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர்க்கொல்லியாக இருக்கும் 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குபெற எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, அ.தி.மு.க அரசும், இப்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று கோரும், 50 லட்சம் பேரின் கையெழுத்தை பெறும் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறுவதுதான் நமது இலக்கு. ஆனால் அதுவரை 'நீட்' தேர்வு இருக்கத்தான் செய்யும். அந்த தேர்வில் கலந்துகொள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தும் திட்டம், அ.தி.முக. அரசு காலத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் இந்த 'நீட்' பயிற்சி வகுப்புகளை, தனியார் 'நீட்' பயிற்சி வகுப்புகளுக்கு இணையாக நல்லதரத்துடன் நடத்தப்படவேண்டும், ஆசிரியர்களும் முழுஈடுபாட்டுடன் நடத்தவேண்டும் என்ற உறுதியோடு, நல்ல ஒரு திட்டத்தை வகுத்து, அதற்காக வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளார்.

இதற்காக மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான கல்விசார் உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்றுவரும் தன்னார்வமிக்க மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பெறும் வகையில், ஒரு குழு அமைத்து அவர்களைக்கொண்டு, அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை 'நீட்' எனும் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் ஜே.இ.இ. என்று சொல்லப்படும் ஐ.ஐ.டி. போன்ற தொழில்நுட்பம் சார்ந்த மத்தியக்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகளின் விடுமுறை நாட்களிலும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அந்தவகையில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ள இந்த புதுமுயற்சிகள் பாராட்டுக்குரியது. அரசு போல, இந்த வகுப்புகளை நடத்துபவர்களும், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தி, தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையான அளவில் அதிக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர உழைக்கவேண்டும். அதிக மாணவர்களை 'நீட்' தேர்வில் வெற்றி பெறச்செய்யும் ஆசிரியர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் அளிக்கப்படவேண்டும்.


Next Story