14 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்


14 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்
x

தெற்காசிய நாடுகளிலேயே 64 ராம்சர் சதுப்புநில அங்கீகாரம் கொண்ட நாடு இந்தியாதான்.

தெற்காசிய நாடுகளிலேயே 64 ராம்சர் சதுப்புநில அங்கீகாரம் கொண்ட நாடு இந்தியாதான். அதில் 14 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருப்பது நமக்கு பெருமை. சதுப்பு நிலம் என்பது கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டருக்கும் குறைவான ஆழம் கொண்ட, பல்வேறு வகையிலான சுற்றுச்சூழல் தன்மைகளைக்கொண்ட நீர்நிலைகளாகும். இந்த நீர்நிலைகளில் கடல் நீரும், நன்னீரும் சேர்ந்திருக்கும்.

சதுப்பு நிலங்கள் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் லி.வெங்கடாசலம் கூறும்போது, "நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தை கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரிலுள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பை தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த சதுப்பு நிலங்கள் முக்கியமானது" என்றார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு உரிய அங்கீகாரம், உலகில் 1971-ம் ஆண்டுதான் கிடைத்தது. புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து உலகைக்காப்பாற்றுவதில் அரணாக, கேடயமாக விளங்கும் சதுப்பு நிலங்கள் அழிந்துவருவது வேதனை. இதை தடுக்க 2-2-1971 அன்று ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் நகரில், முதல் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுடன், "ராம்சர் பிரகடனம்" வெளியிடப்பட்டது. இதில், கையெழுத்திட்ட 172 நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்த பிரகடனத்தின்படி, சிறந்த முறையில் பராமரிக்கப்படும் சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த அங்கீகாரத்தை பெறுவது, சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவத்தை கொடுப்பதுடன், சீரமைப்பு பணிகளுக்கும் சர்வதேச நிதி உதவி கிடைக்கும்.

இந்த அங்கீகாரத்தை பெறும் சதுப்பு நிலங்களில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா?, சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும். இதில் தொய்வு ஏற்பட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கோடியக்கரை வன உயிரின மற்றும் பறவைகள் சரணாலயம்தான், கடைசியாக அங்கீகாரம் பெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகுவும் எடுத்த தீவிர முயற்சிகளால், கடந்த ஜூலை மாதம் செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கடலூர் மாவட்டத்திலுள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இப்போது மீண்டும் இந்தியாவில் அங்கீகாரம் வழங்கப்பட்ட 21 சதுப்பு நிலங்களில், 10 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரத்தை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல்சார் உயிர் கோளகக் காப்பகம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டம் வேம்பனூர் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரேயொரு சரணாலயத்துக்கு மட்டும் கிடைத்த இந்த அங்கீகாரம், இப்போது ஓராண்டில் 13 சரணாலயங்களுக்கு கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால், இதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ளும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களுக்கும் இருக்கிறது. அரசும் இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள சதுப்பு நிலப்பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நீர்வரத்து தாராளமாக இருக்கவேண்டும். அங்கு பரவியிருக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றவேண்டும். தமிழ்நாட்டில் இந்த 14 சதுப்பு நிலங்கள் போக இன்னும் உள்ள 50 சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி ராம்சர் அங்கீகாரம் பெறும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டவேண்டும்.


Next Story