பேரறிவாளன் விடுதலை; பல வினாக்களுக்கு விடை கிடைத்தது!


பேரறிவாளன் விடுதலை; பல வினாக்களுக்கு விடை கிடைத்தது!
x

142-வது சட்டப்பிரிவின் கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார். இந்த வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு பூந்தமல்லியிலுள்ள தடா கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதில் ஒருவரான பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான தேதியும் குறிக்கப்பட்டு, பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பல்வேறு கட்டங்களாக நடந்த சட்டப்போராட்டத்தின் இறுதியில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்தனர். இதில், 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் கடந்த 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தார். மனித வெடிகுண்டு தயாரிக்க தேவையான பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் புலன்விசாரணை செய்த சி.பி.ஐ. சூப்பிரண்டு தியாகராஜன், முதலில் குற்றப்பத்திரிகையில் சொல்லாத ஒரு தகவலை 2013-ம் ஆண்டு ஒரு பேட்டியிலும், பின்பு கோர்ட்டிலும், "விசாரணையின்போது எதற்காக இந்த பேட்டரிகளை வாங்கச் சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது என்று பேரறிவாளன் சொன்ன தகவலை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை" என்று தெரிவித்தார். இந்தநிலையில், "அவரை கொலை குற்றவாளி என்று எவ்வாறு சொல்ல முடியும்" என்பதும் அவரது கருத்து.

2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. மீண்டும் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதன் மீது வெகுநாட்களாக முடிவு எடுக்காமல், கடைசியில் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இப்போது நீதிபதிகள் என்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் விசாரித்து, 161-வது சட்டப்பிரிவின் கீழ் கவர்னர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 142-வது சட்டப்பிரிவின் கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், பல வினாக்களுக்கு விடை கிடைத்துள்ளது.

"அமைச்சரவை பேரறிவாளனுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று அளித்த பரிந்துரையை அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி, ஏற்றுக்கொள்வது கவர்னரின் கடமை. இதன் மீது 2½ ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியதும் சரியல்ல. அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர். சட்டப்பிரிவு 161-ன்கீழ் தண்டனைகளை குறைப்பது, மன்னிப்பு வழங்குவது போன்ற விவகாரங்களில் மாநில அமைச்சரவையின் ஆலோசனை கவர்னரை கட்டுப்படுத்துகிறது. பேரறிவாளன் விவகாரத்தில், அவர் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார். அங்கு அவர் நடத்தையில் புகார் எதுவும் இல்லை. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்தபோதே முதுகலை படிப்பு உள்பட பல படிப்புகளை முடித்திருக்கிறார். இதையெல்லாம் கருத்தில்கொண்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் பேரறிவாளன் நிரபராதி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால், அமைச்சரவையின் பரிந்துரை, அதில் முடிவெடுக்க கவர்னர் தவறியது, தேவையில்லாமல் ஜனாதிபதிக்கு அனுப்பியது, இப்படி பலவற்றை கருத்தில் கொண்டுதான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பல அரசியல் கட்சிகளுக்கு பங்கு இருக்கிறது. என்றாலும், தங்கள் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி, இந்த குண்டு வெடிப்பின்போது, பலியான பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள், பொதுமக்கள் குடும்பத்தினர், அப்போது பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து, உடல் முழுவதும் குண்டுகள் பாய்ந்து, இப்போதும் அந்த குண்டு துகள்களின் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசியா போன்றவர்களின் எதிர்ப்புகளையும் குறிப்பிட்டாகவேண்டும்.


Next Story