உங்களைத் தேடி உங்கள் ஊருக்கு வருகிறார் கலெக்டர்!


உங்களைத் தேடி உங்கள் ஊருக்கு வருகிறார் கலெக்டர்!
x

மக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வுகாண கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க, கால்கடுக்க நின்று மனு கொடுத்த காலம் எல்லாம் போய்விட்டது.

மக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வுகாண கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க, கால்கடுக்க நின்று மனு கொடுத்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது மக்களை அதிகாரிகளே தேடிவரும் காலம் வந்துவிட்டது. இந்தக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்திற்கு ஒவ்வொரு ஊருக்கும் அவர் சென்றபோது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று எழுதப்பட்ட ஒரு பெட்டியை மேடையில் வைத்திருந்தார். அந்தத் தொகுதி மக்கள், தங்கள் குறைகளை மனுவாக எழுதி அதில் போடலாம். அந்தப் பெட்டியை பூட்டி அதன் சாவியைத் தானே வைத்துக்கொள்வேன். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதே முதல் வேலை என்றார். அதேபோல, முதல்-அமைச்சர் பொறுப்பையேற்றவுடன், இதற்காக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார்.

இந்தப் பணிகள் முடிந்தவுடன், 'முதல்வரின் முகவரி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி, பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரிலும், கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்-அப், போன் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு செய்தார். சில நேரம் அவரே அந்த அலுவலகத்துக்கு வந்து பொதுமக்களுடனும், அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுடனும் பேசிவருகிறார். மாத்திரை - மருந்துகளை மருத்துவமனைக்கு சென்று வரிசையில் காத்திருந்து நோயாளிகள் வாங்கிய நிலையில், இப்போது அவர்களின் வீடு தேடிச் சென்று வழங்க வகைசெய்யும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை தொடங்கிவைத்தார். மாணவர்களுக்கு பள்ளி நேரம் போக, மாலை நேரத்தில் டியூஷன் சொல்லிக்கொடுக்கும் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை நிறைவேற்றினார். இது மட்டுமல்லாமல், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ், அவரே மாவட்டந்தோறும் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை மட்டுமல்லாமல், பணிகளை நேரில் பார்வையிடச் சென்று மக்களையும் சந்திக்கிறார்.

இப்போது ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர்களிடம் மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க மனு அளித்து வருகிறார்கள். இனி கலெக்டரே மக்களிடம் சென்று, அவர்களோடு தங்கி, அவர்கள் குறைகளைக் கேட்கும் வகையில், "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், மாதத்தில் ஒரு நாள், ஒரு தாலுகாவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்வார்.

கலெக்டரே ஓர் ஊரில் தங்கி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கும்போது, நிச்சயமாக அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் உடன் செல்வார்கள் என்பதால், மக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், வயது முதிர்ந்தோர் தங்கள் கோரிக்கைக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு தேடிச்செல்லும் நிலைமைக்குப் பதிலாக, கலெக்டரே அவர்களை நாடி வரும் இந்தத் திட்டம் ஒரு நல்ல திட்டம். "மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்" என்ற முதுமொழியை அறிஞர் அண்ணா அடிக்கடி சுட்டிக் காட்டுவது உண்டு. அதை இன்று அவரது வழித்தோன்றலாய் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.


Next Story