பெண்கள் பாதுகாப்பு திட்டம்!


பெண்கள் பாதுகாப்பு திட்டம்!
x

தேசப்பிதா மகாத்மா காந்தி, ‘நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்து நிறைய நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டதன் பொருள்’ என்றார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி, 'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்து நிறைய நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டதன் பொருள்' என்றார். அந்தவகையில், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளன. காவல்துறையில் பெண் போலீஸ் என்ற தனி பிரிவை, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை புலனாய்வு செய்ய, அவர்கள் கூறும் புகார்களை விசாரிக்க அமைத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. 1973-ம் ஆண்டு முதலில் அவர்தான் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையில் ஒரு தலைமை காவலர் மற்றும் 20 பெண் போலீசார் கொண்ட ஒரு படையை அமைத்தார். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் காவல் துறையின் பெருமை என்று போற்றப்படும் மறைந்த எப்.வி.அருள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் 1992-ல் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்னை ஆயிரம்விளக்கில் தொடங்கப்பட்டது. தமிழக பெண் போலீசுக்கு இப்போது பொன்விழா ஆண்டு. இந்த விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. கலைஞர் தொடங்கி வைத்த பெண் போலீசார் பிரிவின் பொன்விழா, கலைஞரின் மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடந்தது அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் மிகவும் பெருமை சேர்க்கிறது.

பெண் போலீஸ் படை அமைக்கப்பட்டதுபோல, இப்போது பெண்கள் பாதுகாப்புக்கும் ஏற்கனவே முதல்-அமைச்சர் அறிவித்த திட்டம் தொடர்பாக இன்று பதவியில் இருந்து ஓய்வுபெறப்போகும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகியவற்றுக்கு அழைக்கலாம். காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைக்கு போகும் பெண்கள், வேலையில் இருந்து வீடு திரும்பும் பெண்கள், வெளியூருக்கு செல்வதற்காக ரெயில், பஸ் நிலையங்கள், விமான நிலையத்துக்கு தனியாக செல்லவேண்டிய பெண்கள், அங்கிருந்து தனியாக வீடு திரும்பும் பெண்கள், மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் என்று பல்வேறு வேலைகளுக்காக இரவில் வெளியே செல்லும் பெண்கள் எப்போது தங்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று அச்சப்படுகிறார்களோ, அப்போது தைரியமாக காவல்துறையின் உதவியை கோரலாம்.

இப்போது இரவில் சுற்றி வரும் போலீஸ் ரோந்து வாகனங்களில் பெண் போலீசாரும் இருக்கிறார்கள். காந்தியின் கனவு நனவாகும் வகையில், இரவில் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பதவியில் இருந்து ஓய்வு பெறப்போகும் நிலையிலும் இதை ஆர்வத்துடன் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவும் பாராட்டுக்குரியவர்கள். இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம் என்று உத்தரவாதம் அளிக்கும் இந்த திட்டம் பெண்களை, "அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே.." என்று துணிச்சலுடன் எங்கும் செல்ல தைரியமூட்டுகிறது.

1 More update

Next Story