சட்டசபை கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்

அவுரங்காபாத் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரை நடத்த விட மாட்டோம் என்று தனஞ்செய் முண்டே கூறினார்.

Update: 2018-05-15 23:22 GMT
அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தில் இரு பிரிவினர் இடையே கடந்த வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 65 வயது முதியவர் உள்பட 2 பேர் பலியாகினர். பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தநிலையில் மராட்டிய சட்டமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே(தேசியவாத காங்கிரஸ்) வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

அவுரங்காபாத் வன்முறை திட்டமிடப்பட்ட ஒன்றா கும். சுமார் 2½ மாதங்களுக்கு முன்பாக உளவுப் பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே வன்முறை வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் உயர் மட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் தங்களது சுய லாபத்துக்காக அவுரங்காபாத் வன்முறைக்கு வகுப்புவாத வண்ணம் பூச முயற்சி செய்கின்றனர்.

உள்துறை அமைச்சகத்தை தன் வசம் வைத்துள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தான் வன்முறை சம்பவத்துக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள மழைக்கால சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தவிட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்