அரசு நலத்திட்ட உதவி பெற அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிகள் பதிவு செய்ய வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்

அரசு நலத்திட்ட உதவிகளை பெற கர்ப்பிணிகள் அங்கன்வாடி மையத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கூறினார்.

Update: 2018-06-13 21:30 GMT

தாயில்பட்டி,

தாயில்பட்டி கலைஞர் காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக புதுமண தம்பதிகளுக்கான ஆலோசனை கருத்தரங்கம் வட்டார மருத்துவ அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. முன்னாள் நாட்டாண்மை மைக்கேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்ட அலுவலர் தங்கலட்சுமி சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:–

குழந்தை திருமணம் நடத்திவைத்தால் பெற்றோர் மட்டுமின்றி விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுமண தம்பதிகள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். புனிதமான பந்தத்தில் இணைந்து அடுத்த தலைமுறையை உருவாக்குவதால் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது கலாசாரத்தை பின்பற்றி நடக்க வேண்டும்.

குழந்தை இல்லைஎன்றால் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். பெண் மீது மட்டும் குறை கூறக்கூடாது. பெண்கள் தாயாரைப்போல மாமியாரையும் மதித்து சகஜமாக இருந்தால் கருத்து வேறுபாடு ஏற்படாது. எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசித்தீர்க்க வேண்டும். இளம் தலைமுறையினரிடையே மதுகுடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே இதில் பெற்றோர் முறையாக கண்காணிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் பயறு, காய்கறி உள்ளிட்ட சாத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் வீட்டுத்தோட்டத்தில் வளரும் காய்கறிகள் நல்ல பலனைத்தரும். மேலும் அரசு உதவிதொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற கர்ப்பிணிகள் அங்கன்வாடி மையத்தில் பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். வட்டா வளர்ச்சி மையம், அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். கர்ப்ப காலத்தில் மன உளைச்சலின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் 35 புதுமண ஜோடிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டாண்மை செல்லத்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்