நாகர்கோவிலில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவிலில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, நகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2018-06-14 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் அண்ணா பஸ் நிலையம் வரை சாலையின் ஒருபுறம் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள் அமைத்திருந்தனர். இதனால் பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் நடைபெற இந்த பாதையோர ஆக்கிரமிப்பு கடைகளும் காரணமாக இருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

இதையடுத்து, சாலையோர நடைபாதை கடைக்காரர்களுக்கு நகராட்சி பூங்காவை அடுத்த கார் நிறுத்தம் அருகே இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சாலையோர நடைபாதை கடை வியாபாரிகள் அந்த இடத்துக்கு செல்ல மறுத்து, தொடர்ந்து அதே பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகி றது. இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் கோட்டார் வரையிலான நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், நகரமைப்பு அதிகாரி விமலா தலைமையில் ஆய்வாளர் கெவின்ஜாய் மற்றும் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை திடீரென வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல வியாபாரிகள் தங்களது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ஆக்கிரமிப்பு கடைகளில் இருந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதால், அதிகாரிகளுடனான வாக்குவாதம் அதிகரித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

மேலும் செய்திகள்