5–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகள் மேலும் 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

காலாப்பட்டு சிறையில் 5–வது நாளாக உண்ணாவிரதம் இருந்த தண்டனை கைதிகள் மேலும் 5 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2018-12-09 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 54 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது தண்டனை காலம் முடிவடைந்தும் தங்களை விடுதலை செய்யவில்லை, மேலும் சிறை நிர்வாகம் தங்களுக்கு பரோல் தர மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தங்களை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும், தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் இருக்கும் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 5–ந் தேதி இரவு முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 5–வது நாளாக நீடித்தது.

இதில் உண்ணாவிரதத்தின்போது மயங்கி விழுந்த கைதிகள் செல்வம், வடிவேல், பிரேம்குமார், ரவி ஆகிய 4 பேரும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 5 பேர் காலாப்பட்டு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்து மீண்டும் சிறைக்கு சென்றனர்.

இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் முருகன், கலில்ரகுமான், முத்துக்குமரன், சக்திவேல், மதன் ஆகிய மேலும் 5 பேர் நேற்று காலை மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தப்பி செல்லாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்