ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டனர்

ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Update: 2019-01-07 23:10 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம், மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொது மக்களும், மாணவ–மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் அப்துல்கலாம் மணிமண்டபம் திறக்கப்பட்ட கடந்த 1½ வருடத்தில் இதுவரை 50 லட்சம் பார்வையாளர்கள் மணிமண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். நேற்றுடன் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்த நிலையில் மணிமண்டபத்தை காண வந்த குழந்தைகளுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது.

பார்வையாளர்களை கலாம் மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன், கலாமின் குடும்பத்தினர் ஜெயினுலாபுதின், நசீமா மரைக்காயர், பேரன் சேக்சலீம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து 3 குழந்தைகளுக்கு கலாம் நினைவிடத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. கலாமின் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதுபற்றி அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் கூறியதாவது:–

முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் மறைந்தாலும் அவருடைய நினைவுகள், சாதனைகளை யாராலும் மறக்க முடியாது. அவர் வழியில் மாணவர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். மணிமண்டபம் திறந்து 1½ வருடத்தில் 50 லட்சம் பார்வையாளர்கள் அவருடைய மணிமண்டபத்துக்கு வந்து சென்றிருப்பதில் வைத்தே அவர் மீது மக்கள் மற்றும் மாணவர்கள் எந்த அளவிற்கு அன்பும் பற்றும் வைத்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இது அப்துல்காலம் குடும்பத்தினராகிய எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்