குளித்தலை அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பேர் படுகாயம் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

குளித்தலை அருகே வேன் மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-05-05 22:15 GMT
குளித்தலை, 

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள தீனதயாள் நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவருடைய மகன் சகுவர்சாதிக் (வயது 23). வேன் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான சையத்அப்துல்லா என்பவரது மகள் தஸ்லிம் (19), அதே பகுதியை சேர்ந்த அனார்கலி (45), சித்ரா (35) ஆகியோரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக தொட்டியத்தில் உள்ள “நீட்” தேர்வு மையத்தை நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தார். வேன் குளித்தலை குமாரமங்கலம் பிரிவு சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த சகுவர்சாதிக், அனார்கலி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். தஸ்லிம், சித்ரா ஆகிய 2 பேரும் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வேனில் வந்த தஸ்லிம் என்ற மாணவி, நேற்று நடைபெற்ற “நீட்” தேர்வை எழுதுவதற்காக திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றிற்கு செல்வதற்காக வந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தஸ்லிம்மை நீட்தேர்வு எழுதுவதற்காக மற்றவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்