பெரம்பலூரில் 210 சித்தர்களின் மகாவேள்வி மழை பெய்ய வேண்டி நடந்தது

பெரம்பலூரில் மழைபெய்ய வேண்டி 210 சித்தர்களின் மகாவேள்வி நடைபெற்றது.

Update: 2019-05-28 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பிரம்மரிஷி ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அதிஷ்டானம் மற்றும் சித்தர் பீடம் உள்ளது. இதில் உலக மக்கள் நலன் கருதியும், நாட்டில் தெய்வீக ஆட்சி மலரவும், கோடை மழையும், பருவமழையும் தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்திட தர்மசிந்தனை பொதுமக்களிடத்தில் வளர வேண்டி கோ பூஜையும், 210 சித்தர்களின் மகாவேள்வியும் நடைபெற்றது. இதற்கு அன்னை சித்தர் ராஜ்குமார்சுவாமி தலைமை தாங்கினார்.

காலையில் நடந்த கோ பூஜைக்கு எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவில் நிர்வாகி இலங்கை ராதாமாதாஜி முன்னிலை வகித்தார்.

சிவசேனா மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார் மகா வேள்வியை தொடங்கி வைத்தார். திட்டகுடி அருந்ததி கோமாதா குழுவினர் கோ பூஜையை நடத்தி வைத்தனர்.

அன்னதானம்

இதனை தொடர்ந்து நடந்த 210 சித்தர்களின் வேள்வியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேத பண்டிதர், சித்தர்களின் குரல் சிவசங்கர் மற்றும் பிரம்மரிஷி மலை ஸ்ரீரெங்க தவசிநாதன் சித்தர், தலையாட்டி சித்தர் பீடத்தின் நிர்வாகி காமராஜ் ஆகியோர் நடத்தி வைத்தனர். திருவாரூர் சிவ.கலாநிதி சுவாமிகளின் சிவபூத கைலாய வாத்தியக்குழுவினர் வாத்தியக்கருவிகளை இசைத்தனர். இதன் நிறைவில் மகா பூர்ணாகுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் இந்து சிவாலய வழிபாட்டுக்குழு மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திரதானங்கள் வழங்கப்பட்டு மகா அன்னதானம் நடந்தது. 

மேலும் செய்திகள்