கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-02 21:45 GMT
சேந்தமங்கலம், 

கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னருக்கு அரசின் சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன், நாமக்கல் உதவி கலெக்டர் கிராந்திகுமார் பதி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா ஆகியோா முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சியை தொடங்கி வைத்து வல்வில் ஓரி மன்னரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் 989 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 83 லட்சத்து 74 ஆயிரத்து 478 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு சமுதாயம் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான் அங்கு வளர்ச்சி என்பது காணமுடியும். மலைப்பகுதியில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் விதமாக தேனூர்பட்டி, வாசலூர்பட்டி போன்ற இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு சார்பில் திறக்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தில் ஹெல்த் இன்டிகேட்டர் எனப்படும் ஆரோக்கியமான நிலைப்பாடு என்பது முக்கியமானது.

ஆனால் கொல்லிமலை பகுதியில் இளம்வயது திருமணமான குழந்தை திருமணம் அதிகமாக நடந்து வருகிறது. இது வேதனைக்குரியது. இதை தவிர்க்க மலைவாழ் மக்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்