கிராமசபை கூட்டத்தில் இருந்து அதிகாரிகள் பாதியில் எழுந்து சென்றதால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குளச்சல் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் இருந்து அதிகாரிகள் பாதியில் எழுந்து சென்றனர். ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-15 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே சைமன்காலனி ஊராட்சி உள்ளது. இது சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய 4 மீனவ கிராமங்களை உள்ளடக்கியது. இந்த கிராமங்களில் கடந்த பல மாதங்களாக 5 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் குப்பை சரிவர அகற்றப்படவில்லை. இதுதவிர தெருவிளக்குகள் சீராக எரியவில்லை. குடிநீர் சீராக வழங்க வேண்டும், குப்பையை அகற்றி, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கோடிமுனையில் உள்ள மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மீனவ கிராம மக்கள் காலையிலேயே திரண்டனர். ஆனால் அதிகாரிகள் வரவில்லை. மதியம் 2 மணியளவில் குருந்தங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர், வட்டார சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் குளச்சல் மீன் துறை ஆய்வாளர் ஆகியோர் வந்தனர். இதனால் கிராம மக்கள் அதிருப்தியடைந்தனர். கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் வர வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது ஊராட்சி பணிகள் மீது விவாதம் நடந்தது. அப்போது அதிகாரிகள் அளித்த பதில் திருப்தியளிக் காததால் பொதுமக்கள் மேலும் அதிருப்தியடைந்தனர். அதைத்தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அதிகாரிகள் எழுந்து சென்றனர்.

முற்றுகை

இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெண்களுடன் திரண்டு வந்து சைமன்காலனி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து சென்ற அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். மேலும் கலெக்டர் வந்து ஊராட்சி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை (அதாவது இன்று) பத்மநாபபுரம் உதவி கலெக்டர் தலைமையில் உங்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என்று கூறினார். அதை பொதுமக்கள் ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்