தடை உத்தரவால், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை - குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் தவிப்பு

144 தடை உத்தரவால் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-06 22:00 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடை முடிந்து விட்டது. இதற்காக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் 137 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து இருந்தது. அவற்றில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.

இது வரை 137 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 91 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியில் மட்டும் பெருமாள் ஏரியை நம்பி விவசாயிகள் காலதாமதமாக நவரை சாகுபடியை தொடங்குவர். இதன்படி 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இந்த சாகுபடியை தொடங்கினர். தற்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு மாவட்டத்தில் அமலில் உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியவில்லை.

ஏற்கனவே கடந்த 24-ந்தேதி குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த தடை உத்தரவால் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அறுவடை செய்த நெல்லை வயலிலேயே தார்பாய் போட்டும், வைக்கோல் போட்டும் மூடி வைத்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி தாலுகா பூவாணிக்குப்பம், சிந்தாமணிக்குப்பம் ஆகிய இடங்களில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்