ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவு அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-05-11 00:21 GMT
ஆரணி, 

ஆரணி, பெரியார் நகர் குடியிருப்பு மையபகுதியில் ஆரணி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் ஆண்கள் வார்டு பகுதியில் கொரோனா தொற்று பாதித்த ஆண்களுக்கான சிறப்பு வார்டு பிரிவாக மாற்றப்படும் என்று மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி கூறினார்.

இந்த வார்டுக்கு அருகில் வெளி நோயாளிகள் வந்து செல்லும் வார்டும், பிரசவ வார்டும், கண் அறுவை சிகிச்சை பிரிவு வார்டும் உள்ளது. மேலும் நகராட்சி மேல்நீர் தேக்கத் தொட்டியும், அம்மா உணவகம், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதியும் உள்ளது.

இந்த பகுதியில் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றியமைத்தால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் ஒரு தொற்று உள்ள பகுதிக்கே அப்பகுதி முழுவதுமே வீட்டை விட்டு வெளிவரக்கூடாத அளவிற்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் சிறப்பு வார்டு, கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு வார்டு உள்ள பகுதியான இங்கு கொரோனா சிறப்பு வார்டு அமைத்தால் பாதுகாப்பற்ற பகுதியாக மாறும். இதனை மாவட்ட கலெக்டர் தலையிட்டு இதற்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியின் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எம்.என்.சேகர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்