திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வீதியை மீறீயவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

Update: 2022-01-24 14:23 GMT
முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் முழூ ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் நிலையங்கள், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வாகன தணிக்கை

முழு ஊரடங்கை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அபராதம் விதிப்பு

இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு இறைச்சி விற்கப்படுவதாக நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், சுதாகர் அந்த பகுதிகளுக்கு சென்று அவர்களை எச்சரித்து இறைச்சி கடைக்களுக்கு ரூ.8 ஆயிரம், 10 மீன் கடைக்கு ரூ.3 ஆயிரம், மற்றும் 2 மளிகை கடைகளுக்கு ஆயிரம் என மொத்தம் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வெறிசோடிய சாலைகள்

மேலும் நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகள், மணவாளநகர், ஒண்டிகுப்பம், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு மப்பேடு, செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு பகுதியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து தெருக்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் காலையில் இருந்து பஸ்கள், லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என எதுவும் இயங்கவில்லை. மேலும் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பள்ளிப்பட்டு பஸ் நிலையம், பஜார் தெரு, மேற்கு தெரு, மெயின் ரோடு, மும்முனை சாலை சந்திப்பு, சோளிங்கர் ரோடு, நகரிரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் போலீசார் அண்ணா சிலை மற்றும் அண்ணாநகர் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தேவையில்லாமல் ஊர் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால் பஸ்கள் ஓடவில்லை. இதனால் ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் நிலையங்கள் மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்பவர்கள் அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

திருமணங்கள்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை செல்லியம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வழிபாடு தளங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் எதிரே சமூக இடைவெளி கடைபிடித்து அரசு உத்தரவை பின்பற்றி 3 திருமணங்கள் நடைபெற்றன.

மேலும் முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும் செய்திகள்