ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் நிலை குறித்து பிரியங்கா கருத்து

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-19 22:15 GMT
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 கைதிகளை விடுதலை செய்வதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அவர்களை விடுதலை செய்வது குறித்து கவர்னர் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தது.

இருப்பினும், 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பிரியங்கா கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில், வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். வன்முறைக்கான தீர்வு, இன்னும் அதிக வன்முறை அல்ல. வன்முறைக்கான தீர்வு அகிம்சைதான் என்று நான் நம்புகிறேன்.

இந்த பிரச்சினையில் என்னை பொறுத்தவரை 2 கோணங்கள் உள்ளன. ஒன்று, எனது தனிப்பட்ட பயணம். கொல்லப்பட்டவர், என் தந்தை. அதில், எனது கருத்தை முன்பே தெளிவாக சொல்லி இருக்கிறேன். நான் நளினியை சிறையில் சந்தித்தது உங்களுக்கு தெரியும். அந்த சந்திப்பு, சில உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எனக்கு தெரிவிப்பதாக அமைந்தது.

மற்றொன்று அரசியல் கோணம். அது முற்றிலும் வேறுபட்டது. அரசியல் மட்டத்தில், அவர் ஒரு முன்னாள் பிரதமர். அது ஒரு அரசியல் படுகொலை. அச்சம்பவம், அவர் மட்டுமின்றி மேலும் பலர் கொல்லப்பட்ட பயங்கரவாத செயல்.

எனவே, ஒரு மகள் நடந்து கொள்வதை போலவே, ஒரு நாடும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்