ம.பி.யில் நான்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர் -கம்ப்யூட்டர் பாபா

ம.பி.யில் நான்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர் என காங்கிரசை சேர்ந்த கம்ப்யூட்டர் பாபா கூறியுள்ளார்.

Update: 2019-07-25 09:31 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு சற்று  குறைவாக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடகத்தில் ‘ஆபரே‌ஷன் லோட்டஸ்’ என்ற நடவடிக்கை வெற்றிபெற்றதை தொடர்ந்து பா.ஜனதா தனது அடுத்த தாக்குதலை மத்தியபிரதேசத்தை நோக்கி திருப்பியுள்ளது என தகவல் வெளியாகியது. இன்னும் 24 மணி நேரங்களில் கூட எங்களால் ஆட்சியை கலைக்க முடியும் என பா.ஜனதா தலைவர் கூறினார். இதற்கிடையே சட்டசபையில் குற்ற சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதுபற்றி முதல்வர் கமல்நாத் கூறும்போது, ‘‘பா.ஜ.க. எங்களை சிறுபான்மை அரசு என்றும், எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் கூறிவந்தது. ஆனால் சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்’’ என்றார். இரு எம்.எல்.ஏ.க்களும் ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்துள்ளனர். இந்நிலையில் மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. காங்கிரசை சேர்ந்த கம்ப்யூட்டர் பாபா பேசுகையில், 4 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். சரியான நேரத்தில் யார் அவர்கள் என்பதை தெரியப்படுத்துவேன் என்றார். கமல்நாத் கூறும்போது, 4 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் ஆட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்