இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,120 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-03-29 15:28 GMT
புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்களில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 396 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 457 ஆக உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியத்தில் 211 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தில் 6 பேர் உயிரிழந்து இருந்தனர்.  மராட்டியத்தின் மும்பை நகரில் ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.

டெல்லியில் இன்று புதிய பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உள்ளது.  இதனால் டெல்லியில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.  பீகாரில் 4 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் 63 ஆகவும், உத்தரகாண்டில் 7 ஆகவும், கோவாவில் 5 ஆகவும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

நாட்டில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த ஒரே வாரத்தில் 400 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  90 பேருக்கும் கூடுதலானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்