திருப்பதியில் பணிச்சுமையால் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

திருப்பதியில் பணிச்சுமையால் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-08 12:36 GMT


திருமலை,

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தராவ்.  இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர். இன்று காலை 6.30 மணியளவில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அங்குள்ள துப்பாக்கிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கு சென்றார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில் திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.  ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வெடித்த சத்தம்கேட்டு அங்கிருந்த பயணிகள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து இங்கும் அங்கும் ஓடினர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அவர்கள் அந்த அறைக்குள் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு நாற்காலியில் அமர்ந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு ஆனந்தராவ் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

இதுகுறித்து ரேணிகுண்டா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பணிச்சுமை காரணமாக ஆனந்தராவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்தது. விடுமுறை கிடைக்காததால் அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதனால் குடும்பத்தினரை பார்க்க முடியாத ஏக்கத்தில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாதுகாப்பு படை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்