பீகாரில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: நோட்டீஸ் கொடுத்தது பா.ஜ.க.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் நந்தகிஷோர், சட்டசபை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Update: 2024-01-29 12:05 GMT

பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. நேற்று காலையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மாலையில் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்நிலையில், சபாநாயகர் அவாத் பிகாரி சவுத்ரிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் நந்தகிஷோர், சட்டசபை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அந்த நோட்டீசில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி, முன்னாள் துணை முதல்-மந்திரியும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான தர்கிஷோர் பிரசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ரத்னேஷ் சதா உட்பட பல எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பீகாரில் 2022-ம் ஆண்டு மெகா கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அவாத் பிகாரி சவுத்ரி, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ராஷ்டிரிய ஜனதா தளத்தை வீழ்த்தி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் பதவியை அவாத் பிகாரி சவுத்ரி ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவரை நீக்குவதற்காக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 128 ஆகவும், மெகா கூட்டணியின் பலம் 114 ஆகவும் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்