வெளிநாட்டுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வெளிநாட்டுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேசுவதில் அக்கட்சி மகிழ்ச்சி அடைகிறது என்று சத்தீஷ்கார் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Update: 2023-10-03 23:45 GMT

கோப்புப்படம்

ராய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். ஜெகதால்பூர் என்ற இடத்தில் நடந்த மத்திய அரசு விழாவில், ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அவற்றில், பஸ்தார் மாவட்டத்தில் அமையும் உருக்காலை, டடோகி-ராய்ப்பூர் இடையிலான மின்சார ரெயில் சேவை ஆகியவையும் அடங்கும். இரட்டை ரெயில்பாதை அமைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த விழாவில், காங்கிரஸ் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கலந்து கொள்ளவில்லை. துணை முதல்-மந்திரி திரிபுவனேஸ்வர் சரண்சிங் தியோ, மந்திரிகள் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

வராதது ஏன்?

பின்னர், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி பேசுகையில், முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

மாபெரும் மத்திய அரசு விழா நடந்தது. ஆனால், முதல்-மந்திரியோ, மந்திரிகளோ கலந்து கொள்ளவில்லை. அது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதற்கு 2 காரணங்கள் எனக்கு தோன்றுகிறது.

முதலாவது, அவர்களது ஆட்சி போகப்போகிறது. அந்த கலக்கத்தால் வராமல் இருந்திருக்கலாம். இரண்டாவது, கழுத்தளவு ஊழலில் மூழ்கி இருப்பதால், என்னை நேரில் சந்திக்க பயந்து வராமல் போயிருக்கலாம்.

இயற்கைவளம் கொள்ளை

சத்தீஷ்கார் மாநிலம், இயற்கை வளம் நிறைந்தது. இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதில் சரித்திரம் படைத்தது, காங்கிரஸ் கட்சி.

சத்தீஷ்காரில், ஊழலும், குற்றச்செயல்களும் உச்சம் அடைந்துள்ளன. இரண்டு விஷயங்களிலும், ராஜஸ்தானுடன் சத்தீஷ்கார் போட்டியிடுகிறது. பா.ஜனதா ஆட்சி அமைத்தவுடன், ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர்கள் நடத்தவில்லை. தேசவிரோத சக்திகளுக்கு நெருக்கமானவர்களால், திரைமறைவில் அக்கட்சி நடத்தப்படுகிறது. மூத்த தலைவர்கள் வாய்மூடி மவுனமாக உள்ளனர்.

ரகசிய ஒப்பந்தம்

காங்கிரஸ் கட்சி, ஒரு வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதுகுறித்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

வளர்ந்த பாரதத்தை உருவாக்க நாம் கனவு கண்டு வருகிறோம். மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் ஆகியவையும் வளரும்போதுதான் 'வளர்ந்த பாரதம்' என்ற கனவு நனவாகும்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ''நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கே முதல் உரிமை'' என்று கூறினார். ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி, ''மக்கள்தொகையில் யார் அதிகமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கே அதிக உரிமை அளிக்க வேண்டும்'' என்று கூறுகிறது.

பிளவுபடுத்த முயற்சி

அப்படியானால், சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க விரும்புகிறதா? மக்கள்தொகையில் அதிகமாக இருக்கும் இந்துக்கள் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? இதுபற்றி மன்மோகன்சிங் என்ன நினைக்கிறார்?

என்னை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் ஏழைகளாக உள்ளனர். எனவே, எந்த சாதி, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஏழைகள் நலன்தான் எனக்கு முக்கியம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ, ஓட்டுவங்கி அரசியலுக்காக சாதி அடிப்படையில் இந்துக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. அதன்மூலம் நாட்டை அழிக்க பார்க்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்