உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

Update: 2023-06-21 19:34 GMT

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.

இதன்பின்பு, இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.

இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார்.

பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட வைரத்தின் ரசாயன மற்றும் ஒளி பண்புகளை இந்த வைரம் பிரதிபலிக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இருக்கும். சூரிய மற்றும் காற்று சக்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பன்முக தன்மை வாய்ந்த முறையில் அது தயாரிக்கப்பட்டு உள்ளது.

 

Live Updates
2023-06-22 17:07 GMT

இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும் தோளோடு தோள் சேர்ந்து நடக்கின்றன- பிரதமர் மோடி

இன்று, இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும் தோளோடு தோள் சேர்ந்து நடந்து வருவதாக ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பிடனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மோடி மற்றும் பைடன் இடையேயான இந்த முதல் சந்திப்பு, இரு தரப்புக்கும் இடையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு களம் அமைக்கும் என்று கருதப்படுகிறது.

2023-06-22 16:22 GMT

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அமெரிக்காவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருவதாகவும், அமெரிக்க வாழ் இந்தியர்களை பெருமைப்படுத்தியதற்காக ஜனாதிபதி பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய விவகாரங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023-06-22 15:46 GMT

உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து,  இந்திய - அமெரிக்க சமூகத்திற்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் பெரிய அளவில் திறக்கப்பட்டுள்ளன என்றும், பிரதமர் ஆன பிறகு பலமுறை வெள்ளை மாளிகை வந்தபோதிலும் தற்போது பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களது கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

2023-06-22 14:58 GMT

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“ஜனாதிபதி பைடனின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நட்புக்கு நன்றி. நான் பிரதமராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு பலமுறை வந்துள்ளேன். இன்று முதல் முறையாக இத்தனை இந்திய-அமெரிக்கர்களுக்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அமெரிக்காவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். எங்கள் உறவின் உண்மையான பலம் நீங்கள். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்த கவுரவத்தை வழங்கி பெருமைப்படுத்தியதற்காக ஜனாதிபதி பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடனுக்கு மிக்க நன்றி.

அதிபர் ஜோ பைடனும், நானும் இன்னும் சிறிது நேரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். எங்கள் பேச்சு சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

2023-06-22 14:33 GMT

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

ராணுவ பேண்ட் மூலம் அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்திய அமெரிக்க உயர்மட்ட குழு அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார் பிரதமர் மோடி.

2023-06-22 04:03 GMT

பிரதமர் மோடியின் இரவு விருந்தில் இடம் பெற்ற பைடனின் விருப்ப உணவு

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் பிரதமர் மோடியை சிறப்பான முறையில் வரவேற்று அவருக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அவர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் சிறப்பான முறையில் வரவேற்று அவருக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் விருப்ப உணவுகளான பாஸ்தா மற்றும் ஐஸ் கிரீம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

இந்த விருந்து நிகழ்ச்சியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2023-06-22 03:47 GMT

அமெரிக்க அதிபர் பைடனுக்கு சந்தனப்பெட்டி பரிசளித்த பிரதமர் மோடி

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சிறப்பு சந்தனப்பெட்டி ஒன்றை பரிசளித்து உள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினை கலைஞர் இந்த சந்தன பெட்டியை உருவாக்கி உள்ளார்.

இந்த சந்தனம் கர்நாடகாவின் மைசூர் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. அதில், சிறப்பான நறுமணமும் மற்றும் கலை நுணுக்கங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டும் உள்ளன.

அந்த சந்தன பெட்டியுடன், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரை சேர்ந்த வெள்ளி கொல்லர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மற்றும் விளக்கு ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்தாம் தலைமுறையாக வெள்ளி கொல்லர்களாக இருந்து வருகின்றனர்.

இதேபோன்று, பஞ்சாப் நெய், ஜார்க்கண்ட் டஸ்ஸார் பட்டு உள்ளிட்ட 10 பொருட்களும் பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

2023-06-22 01:10 GMT

வாஷிங்டன் டி.சி.,

இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.

2023-06-21 23:38 GMT

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிணைப்பின் அடிப்படை ஆதாரம் “கல்வி” - ஜில் பைடன்

வர்ஜீனியா,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடென் ஆகியோர் இன்று அதிகாலை வர்ஜீனியாவில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்கு வருகை தந்தனர், அவர்கள் கல்வி மற்றும் பணியாளர்களுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் பகிர்ந்துள்ள முன்னுரிமையை எடுத்துரைத்தனர்.

அவர்களுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், “அமெரிக்க-இந்திய உறவு என்பது அரசாங்கங்கள் மட்டுமல்ல. உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் மற்றும் நட்புகளை நாங்கள் கொண்டாடுகிறோம், எங்கள் இரு நாடுகளின் பிணைப்புகளை உணர்கிறோம்... உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிக்கும் போது அமெரிக்க-இந்தியா கூட்டாண்மை ஆழமானது மற்றும் விரிவானது.

எங்கள் பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டுமெனில், நமது எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும். அவர்களுக்குத் தகுதியான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜோ பைடனின் அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம், மில்லியன் கணக்கான நல்ல வேலைகளை உருவாக்குகிறோம். சுத்தமான எரிசக்தி மற்றும் உற்பத்தி போன்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன” என்று ஜில் பைடன் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்